குற்றவியல் நடைமுறைச் சட்டம் : அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திருத்தங்கள்
குற்றவியல் வழக்குகளை விரைவாக தீர்க்கும் நோக்கத்துடன் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மனு பேரம் அல்லது மனு ஏற்பாட்டு விதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த திருத்தங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தாமதங்களைக் குறைப்பது, சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பது மற்றும் வழக்குகளின் தேக்கநிலையைக் குறைப்பது உள்ளிட்ட காரணங்களுக்கு இந்த யோசனைகள் உதவும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதியும் அரசுத் தரப்பும் ஒரு ஒப்பந்தத்தில் நுழைய முடிவதுடன் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்குச் செல்வதற்குப் பதிலாக குற்றத்தை ஒப்புக்கொள்ளலாம்.
இழப்பீட்டுத் தொகை
இதன் விளைவாக தண்டனையைக் குறைக்கவும் அபராதம் அல்லது இழப்பீட்டுத் தொகையைக் குறைக்கவும் ஒரு பரிந்துரையைப் பெறக்கூடியதாக இருப்பதுடன் நீதிவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதற்கு முன்பதாகவே இரண்டு தரப்பினரும் மனு உடன்பாடுகளில் நுழைய முடியும் என்றும் இந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் அனைத்து நிபந்தனைகளும் குற்றம் சாட்டப்பட்டவரால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டவுடன் தற்போதைய குற்றப்பத்திரிகைக்கு வழிவகுத்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் வேறு எந்த குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள மாட்டார் என்றும் இந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |