கால்நடை வளர்ப்பு துறையில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் - நாமல் ராஜபக்ச
சுயதொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் .
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சுற்றி, சீமெந்து மற்றும் உருக்கு உற்பத்தி உட்பட பத்து புதிய கைத்தொழில் தொழிற்சாலைகளைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை திட்டத்தின் ஊடாக சீமெந்து விநியோகம் அதிகரிக்கும் எனவும் பின்னர் அதன் விலை குறையும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
தொழில் முனைவோர் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கவும், அரசாங்கத்தால் கட்டப்படும் வீட்டுக் கடைகளில் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் தொழில் பயிற்சிகளை மேம்படுத்துவதற்காக 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
நிதி நெருக்கடியுடன் அரசாங்கம் இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் அரச துறையின் சம்பளங்களை தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் சமாளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.