சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபர் தொடர்பில் வெளியாகியுள்ள அதிரடி தகவல்!
சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன், மூன்று மாத காலத்திற்கு மாத்திரம் அவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா காவல்துறை மா அதிபரான சந்தன விக்ரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி ஓய்வு பெறவிருந்தாலும், அவரது சேவைக்காலம் தொடர்ந்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நீடிக்கப்பட்டு வந்தது.
காவல்துறை மா அதிபர்
இந்த நிலையில், காவல்துறை மா அதிபரின் நியமனம் தொடர்பில், அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், இது தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் காவல்துறைமா அதிபர் நியமனம் தொடர்பில் அதிகாரிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தாலும், அது தொடர்பான இறுதி தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
அரசியலமைப்பு பேரவை
இந்த பின்னணியில், புதிய காவல்துறை மா அதிபர் நியமனம் தொடர்பான நியமனப் பத்திரத்தை அடுத்த வாரம் அரசியலமைப்பு பேரவைக்கு சிறிலங்கா அதிபர் அனுப்பவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பு பேரவை கூட்டத்திற்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை.
இதேவேளை, இந்த திகதி தொடர்பான அறிவிப்பு நாளைய தினம் மேற்கொள்ளப்படுமென நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |