சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ரணிலை ஆதரிப்பதற்காக புதிய அரசியல் கூட்டணி
இலங்கையில் (Sri Lanka) இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சி ஆகியவற்றில் இருந்து பிரிந்து சென்ற தரப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட புதிய கூட்டணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய கூட்டணியின் அங்குராரர்ப்பண நிகழ்வின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முதன்மையாக கொண்டு புதிய அரசியல் கூட்டணிகளும் கட்சிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
புதிய அரசியல் கூட்டணி
இந்த பின்னணியில், சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திர கட்சி ஆகியவற்றில் இருந்து பிரிந்து சென்ற தரப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கூட்டணி கடந்த சனிக்கிழமை (8) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premjayantha), துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva), சுதந்திர கட்சியின் பதில் செயலாளர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது உரையாற்றிய தரப்பினர், ராஜபக்ச (Rajapakse) குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) ஆகியோர் மீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
தவறான அரசியல்
அத்துடன், மைத்திரிபால சிறிசேனவின் தோல்வி காரணமாக புதிய அரசியல் கூட்டணி தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த நிகழ்வில் உரையாற்றிய விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera)சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் தவறான அரசியலை முன்னெடுத்து வந்த தரப்பினர் அங்கொட மனநல வைத்தியசாலை அல்லது வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்ல வேண்டுமென சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுமார் 30 உறுப்பினர்கள் பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |