அரச பேருந்துகளுக்கு கியூ ஆர் முறையில் கட்டணம்! விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்
அரசு நடத்தும் பேருந்துகளுக்கு இலத்திரனியல் அட்டை அல்லது க்யூஆர் முறைமை கட்டண முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (11) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
"இந்தத் திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) புதிய இணையத்தளத்தில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சில பேருந்து சாரதிகள் அல்லது நடத்துனர்களால் அன்றைய மொத்த வருமானம் அந்தந்த டிப்போக்களுக்குத் திருப்பித் தரப்படுவதில்லை.
இதனால் ஒரு டிப்போவிற்கு நாளொன்றுக்கு சுமார் 100,000 ரூபா வரை இழப்பு ஏற்படுகிறது.
இந்த இழப்பீடுகளை நிறுத்தும் பொருட்டே இலத்திரனியல் அட்டை அல்லது கியூஆர் குறியீட்டு முறைமையுடன் கூடிய பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த முறைமை சுமார் இரண்டு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் " என அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் மயமாக்கல்
மேலும், இந்த முயற்சியானது 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை போக்குவரத்து சபைக்காக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியாக அமைவதாவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தத் திட்டமானது 2024 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |