களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நிலாந்தி ரேணுகா டீ சில்வா நியமனம்
களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று மாலை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அதிபரின் தெரிவு
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இந்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சுற்று நிருபத்துக்கமைய நடாத்தப்பட்ட தெரிவில் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டீ சில்வா முதனிலை பெற்ற அடிப்படையில், களனி பல்கலைக்கழகப் பேரவையினால் அவரது பெயர் அதிபரின் தெரிவுக்காக முன்மொழியப்பட்டிருந்தது.
சிறி ஜயவர்தனபுர பல்கலைக் கழக துணைவேந்தர் பதவி
அதேபோல, சிறி ஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் வெற்றிடமாகவிருந்த துணைவேந்தர் பதவிக்காக நடாத்தப்பட்ட தெரிவிலும் முதனிலை பெற்றிருந்த உயர் பட்டக் கற்கைககள் பீடப் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் எம். மானகே நேற்று 26 ஆம் திகதி முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று வருட காலத்துக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
யாழ். பல்கலைக் கழகத்திற்கான துணைவேந்தர் தெரிவு
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடந்த 12 ஆம் திகதி துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவைக் கூட்டம் நடாத்தப்பட்டு, பேரவையினால் மூன்று பேரது பெயர்கள் அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.