நியூசிலாந்தில் இலங்கையர் மேற்கொண்ட கத்திக்குத்துத் தாக்குதல்- வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை!
நியுஸிலாந்து பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அகில் இலங்கை ஜம்மியதுல் உலமாவின் காத்தான்குடிக் கிளை இணைந்து ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளன.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
செப்டபம்ர் 3, 2021 அன்று நியுஸிலாந்தின் ஒக்லாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அங்காடியின் உள்ளே சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை ஆதரிக்கும் போக்குடைய இலங்கைப் பிரஜை ஒருவர் பொது மக்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அறிந்ததில் மிகுந்த அதிர்ச்சியும் கடுமையான மனவேதனையும் அடைகிறோம்.
வெறுக்கத்தக்க மிலேச்சத்தனமான இப்பயங்கரவாதச் செயலை காத்தான்குடி மக்கள் சார்பாகவும், இலங்கை முஸ்லிம் சமுகம் சார்பிலும் எமது சம்மேளனமும், அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் காத்தான்குடி கிளையும் இணைந்து வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்பமாக அறிக்கை வெளியிட்ட நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா அட்றென் கூறிய நேர்மையானதும், நடுநிலையானதுமான வார்த்தைகள் அர்த்தமிக்கவையும் மெச்சத்தக்கவையுமாகும். தாக்குதலைச் செய்தவர் ஒரு தனி நபர், அவர் செயலுக்கு அவர்மட்டுமே பொறுப்பாவார். தாக்குதல் சம்பவம் ஒரு மத நம்பிக்கையிலோ, குறிப்பிட்ட இனக்குழுவையோ, கலாசாரத்தையோ சாராது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
எமது கருத்து நிலையும் அதுசார்ந்ததாகவே இருக்கிறது. நிச்சயமாக இத்தாக்குதலானது மிகப்பிழையானது, அருவருப்பான செயலும் கூட. தீவிரவாதமும் பயங்கரவாதமும் அதன் எந்த வடிவிலும் ஏற்கத்தக்கதல்ல. எந்தவெரு இனமோ, மதமோ, கலாசாரமோ அதற்கு சார்பாகவோ பொறுப்பாகவோ இருக்கவும் முடியாது. இருக்கவும் கூடாது.
தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் , காயமடைந்தவர்கள் அவர்களது குடும்பங்களின் வலியை நாமும் உணர்கிறோம். மனிதம் சார்ந்த உறவு நிலையில் இன, மத, தேச வேறுபாடுகளைக் கடந்து அவர்களுக்கான எமது ஆழந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம்.
பல்முனை ஊடகங்கள் வாயிலாகவும், உள்ளூர் மட்ட அறிதல்கள் அடிப்படையிலும் நாம் அறிவது என்னவென்றால் இவ்வீனசெயலைப் புரிந்த பயங்கரவாதியும் அவரது குடும்பத்தினரும் நீண்ட நாட்களாக காத்தான்குடியில் இருக்கவில்லை. தொழில் , கல்வி மற்றும் இன்னபிற காரணங்களுக்காக ஊரைவிட்டு வெளியேறி நீண்ட காலமாக வெளியில் தான் வாழ்ந்தனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.