கனடா ஆசை காட்டி இலங்கையர்களை ஏமாற்றிய சர்வதேச கும்பல்: முக்கிய புள்ளி கைது
இலங்கையர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சர்வதேச மனித கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து குறித்த நபர் இந்திய அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, இந்தியாவின் தேசிய விசாரணை முகவரகம் (NIA) அவரைக் கைது செய்துள்ளது.
சிவப்பு அறிக்கை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தேசிய விசாரணை முகவரகத்தின் கோரிக்கையின் பேரில் விடுக்கப்பட்ட இன்டர்போல் சிவப்பு அறிக்கைக்கமைய இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபர், கடந்த 13 ஆம் திகதி பெங்களூரு கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து NIA குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பூர்வ கடவுச்சீட்டுகள் மூலம் கனடாவுக்குச் செல்ல வழிவகுப்பதாக உறுதியளித்து இலங்கை குடிமக்களை முறைகேடான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் சதித்திட்டத்தில் இவர் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பெருமளவில் பணத்தைச் சேகரித்த அவர், ஹவாலா (Hawala) முறையைப் பயன்படுத்தி இந்தியாவின் பிற சந்தேக நபர்களுக்கு அந்தப் பணத்தை அனுப்பியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியான விசாரணை
கடந்த 2021ஆம் ஆண்டு மங்களூரில் உள்ள வீடு ஒன்றில் இலங்கை குடிமக்கள் சிலர் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தமை குறித்த தகவலை அடுத்து இந்தியக் காவல்துறையினர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து இந்த விசாரணைகளை பொறுப்பேற்ற தேசிய விசாரணை முகவரகம்உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இந்தநிலையில் இதற்கு முன்னர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இந்த மோசடியுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனடிப்படையில் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி இலங்கை குடிமக்களை ஏமாற்றும் இந்தச் சட்டவிரோத மனித கடத்தல் வலையமைப்பு தொடர்பில் தேசிய விசாரணை முகவரகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான விசாரணைகளின் மற்றுமொரு முக்கிய படியாக இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |