பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக தீவிர முடிவு: கொந்தளிப்பில் எதிர்க்கட்சிகள்
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையை நீதி மற்றும் நம்பிக்கையுடன் முன்னெடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், முஜிபுர் ரஹ்மான் பேசியபோது, இந்த தீர்மானம் வரும் திங்கட்கிழமை (12) தினம் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒப்புக்கொண்ட ஜனாதிபதி
அத்துடன், “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நேர்மையாக நடத்துவது மிகவும் அவசியமாக உள்ளது. தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் தொடர்புடைய சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், பிரதி அமைச்சர் பதவி விலகவேண்டும். அதுவே நியாயமானது” என அவர் கூறினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிப்பதில் உள்ள சவாலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவே ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
முக்கிய குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன, முன்பு விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ரவிக்கருணாநாயக்க ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கலானபோது பதவி விலகிய நிகழ்வை எடுத்துக்காட்டி, தற்போதைய பிரதி அமைச்சரும் அதையே பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில், பிரதி அமைச்சர் அருணவின் மீதான முக்கிய குற்றச்சாட்டு, இலங்கை இராணுவத்தின் கிழக்குத் தளபதியாக இருந்தபோது, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய தற்கொலை குண்டுதாரி சஹாரனின் நடவடிக்கைகளைத் தடுக்கத் தவறியதே ஆகும் என கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
