எந்தவொரு பிரேரணைக்கும் அஞ்சப்போவதில்லை..! அரசாங்கம் அதிரடி
எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லா பிரேரணையை கண்டும் அரசாங்கம் அஞ்சப் போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (14.10.2025) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக எதிர்கட்சிகள் முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்திருந்ததை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
இந்நிலையில், மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர், “தாம் கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியுறுவோம் என அறிந்திருந்தாலும் அவ்வாறு எதையாவது எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்.
நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு அரசாங்கம் அச்சமடையாது.
எனினும், கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணையை உரிய முறையில் கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றம் சம்பிரதாயம், சட்டம் மற்றும் நிலையியற் கட்டளையின் அடிப்படையிலேயே செயற்படும்.
எனவே, சில சந்தர்ப்பங்களில் சபாநாயகரினால் மேற்கொள்ளப்படக்கூடிய தீர்மானங்கள் வரலாற்று சட்டம், நிலையியற் கட்டளையாக மாறும் நிலை உள்ளது.
ஆகவே அதனை உரிய முறையில் முன்வைத்தால் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதுடன் அதற்கான விவாதத்திற்கான தினத்தையும் வழங்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
