வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சில ஊடகங்கள் தெரிவித்தபடி வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இலங்கை மத்திய வங்கிக்கும் திறைசேரிக்கும் இடையே கடிதப் பரிமாற்றமோ அல்லது தகவல் தொடர்புகளோ இல்லை என்று அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்
நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதால், பெப்ரவரி 1 முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகனங்களை இறக்குமதி செய்வது மீண்டும் தொடங்கப்பட்டது.
அப்போதிருந்து, ஜூன் இறுதி வரை கிட்டத்தட்ட 18,000 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவற்றில், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் 13,614 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மத்திய வங்கி மறுப்பு
அதன்படி, பெப்ரவரி முதல் கடந்த 5 மாதங்களில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக 800 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பிணைமுறி பத்திரங்கள் திறக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துமாறு மத்திய வங்கி திறைசேரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சில ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில், மத்திய வங்கி இதனை முற்றாக மறுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
