மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு நிறுத்தம் : போராட்டத்தில் குதிக்கும் வைத்தியர்கள்
மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு நிறுத்தப்பட்டதை எதிர்த்து சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த வேலைநிறுத்தப் போராட்டமானது நாளை (24) காலை 08 மணி முதல் இடம்பெறவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்துக் கொடுப்பனவுகளை இரண்டு மடங்காக அதிகரிக்கவுள்ளதாக அதிபரின் முன்மொழிவுக்கு ஏற்ப அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருந்தது.
மேலதிக கொடுப்பனவு
அதன்படி 35,000 ரூபாவாக இருந்த குறித்த மேலதிக கொடுப்பனவானது 70,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திறைசேரியின் உத்தரவுக்கு அமைய அதிகரிக்கப்படவிருந்த 35,000 ரூபா தொகையானது தற்போது இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத வேளையில் திடீரென அறிவிக்கப்பட்ட இந்த முடிவானது அரச மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
காலவரையற்ற வேலைநிறுத்தம்
இதன் காரணமாக அவர்கள் நாளை காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த கொடுப்பனவுகளை மேற்பார்வை செய்யும் விடயத்திற்கு பொறுப்பான சுகாதார அமைச்சு, இந்த மேலதிக கொடுப்பனவை இடைநீக்கும் முடிவை உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.