மரணத்திற்குப் பிறகும் யாரும் தேடாத 9 உயிர்கள்! ஹொரணை தீ விபத்தின் வேதனை
ஹொரணை அங்குருவத்தோட்டை, படகொடவில் உள்ள 'செனஹசே கெடெல்ல' தடுப்பு முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 பேரில் 9 பேரின் உடல்களைப் பெற்றுக்கொள்ள எந்த உறவினர்களும் முன்வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல் நேற்று (11.06.2026) ஹொரானா பிரதம நீதவான் லக்மினி விதானகமகே முன்னிலையில் வெளிப்படுத்தப்பட்டது.
மேலும், உயிரிழந்த மற்ற ஐந்து பேரின் உடல்களைப் பெற்றுக்கொள்ள அவர்களது உறவினர்கள் முன்வந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற அறிக்கை
முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றி, தடுப்பு மையத்தை பாதுகாப்பற்ற முறையில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட உரிமையாளரான 38 வயதான இசுரு அனுஷ்காவை பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

'tiktok' சமூக வலைதளத்தில் "லொக்கு அய்யா" என்ற பெயரில் அறியப்படும் அந்த சந்தேக நபரை, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பிணை மற்றும் தலா பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீர பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த விசாரணைக்காக சந்தேக நபர் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மையத்தின் கதவுகளும் ஜன்னல்களும் பூட்டப்பட்டிருந்ததால், உள்ளே இருந்தவர்களை மீட்பது கடினமாக இருந்தது என்று அங்குருவதோட்டை காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
14 பேர் உயிரிழப்பு
மேலும், சந்தேக நபர் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கோ அல்லது தீயணைப்புத் துறைக்கோ தகவல் தெரிவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அவர் தீ விபத்தை காணொளி எடுத்து தனது 'tiktok' கணக்கில் பதிவேற்றியிருந்தார் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

இந்த துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மற்றும் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதே நேரத்தில் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
பிரதேச செயலகம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் அதிகாரப்பூர்வ கடிதத் தலைப்புகளில் கைதிகள் இந்த நிறுவனத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பதும் நீதிமன்றத்தில் மேலும் தெரியவந்தது.
இவ்விடயம் தொடர்பாக அங்குருவத்தோட்டை காவல்துறையால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட வழக்கு ஜூன் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்