மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்து சபையில் கருத்து வெளியிட்ட அமைச்சர்
தமிழ் மக்களுக்கு முக்கியமான கார்த்திகை மாதத்தில் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்றனர் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று போராடிய இளைஞர்கள் அல்லது மக்களுடைய எதிர்பார்ப்பு, ஆசைகள், அபிலாஷைகள் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய (12.11.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த வியடத்த்னைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "வரவு செலவுத்திட்டம் குறித்து நாங்கள் பேசுகின்ற நிலையில் வடகிழக்கு பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக பேசுவது குறைவாக இருப்பதை காண முடிந்துள்ளது. அந்த மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
கார்த்திகை மாதம் என்பது தமிழ் மக்களுக்கு முக்கியமான மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் விசேடமாக மாவீரர்களை நினைவுகூருகின்ற மாதம்.
அது மாத்திரமின்றி வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் தங்களுடைய பிள்ளைகளை நினைவுகூருகின்ற மாதம். இந்த மாதத்தில் இருந்து கொண்டு நாங்கள் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.
இன்றைக்கு பல தசாப்தங்களுக்கு முன்பு இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் அல்லது தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று போராடிய இளைஞர்கள் அல்லது போராடிய மக்கள் எதிர்பார்த்தது என்ன. அவர்களுடைய எதிர்பார்ப்பு, ஆசைகள், அபிலாஷைகள் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அங்கிருக்கின்ற நிம்மதியாக சந்தோசமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் அந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடியிருந்தால் இன்றைக்கு அந்த மக்களினுடைய கனவினை நனவாக்குகின்ற செயற்பாடுகளை எந்த ஒரு தமிழ் கட்சியாவது எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியாவது அன்றைய காவலகட்டத்தில் அவர்கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகங்களை செய்கின்றார்களா என்பது கேள்விக்குறியான விடயம்." என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |