இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் - ஐ.நாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வடகொரியா
தமது நாட்டின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயல்பட வேண்டும் என்று வடகொரியா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ள வடகொரியா ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அந்தக் கூட்டத்தில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பாதுகாப்பு சபை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு தடைவிதிக்கும் சபையின் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஜோ சோல் சூ கூறுகையில் ‘‘அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இதேபோன்ற ஆயுத சோதனைகளில் சமமாக பிரச்சினை எடுக்காததால், ஐ.நா. பாதுகாப்பு சபை இரட்டை கையாளும் தரநிலை கொண்டது என்பது தெரிகிறது.
வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயல்பட வேண்டும்’’ என குறிப்பிட்டார்.