தமிழர்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை : விதுர விக்கிரமநாயக்க வலியுறுத்து
தமிழர்களை நாங்கள் புறக்கணிக்கவில்லை,புறக்கணிக்க போவதுமில்லை என புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(06) நாடாளுமன்றில் இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, ,சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுக்கான செலவினத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அபிவிருத்தி பணிகள்
“பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அரசியலமைப்பின் 9 ஆவது உறுப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை ஏனைய மதங்களை இரண்டாம் பட்சமாக்க வேண்டும் என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
அரசாங்கம் மற்றும் அமைச்சு, மதம் மற்றும் மொழி அடிப்படையில் எவரையும் மலினப்படுத்தவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொன்மை வாய்ந்த இந்து கோயில்களை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இந்து மத விவகாரங்கள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் உள்ள இரண்டு கோயில்களின் கலை சிற்பங்களில் விசேட இலட்சினங்கள் இருப்பதை அவதானிக்க முடிகிறது.அந்த இலட்சினங்கள் பிற கோயில்களில் இல்லை.
ஆகவே இந்த ஆண்டுக்குள் இந்த கோயில்கள் இரண்டும் புனரமைக்கப்பட்டு,பக்தர்களின் வழிபாடுகளுக்காக விடப்படும்.
இந்து மத கலாசாரத்தையும்,மத சின்னங்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |