தமிழர்களை வெட்டுவேன் : எச்சரிக்கும் இனவாத தேரர் (காணொளி)
அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதிக்கு இன்று(25) மாலை சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழர்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களது மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதற்கு எதிராக கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்ததுடன், தமது தாயாரின் சமாதி குறித்த பகுதியில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம்
குறித்த பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பாக கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்ட நிலையில், அவற்றினை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மாநகர சபை ஆணையாளர் அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம் நேற்று(24) தெரிவித்துள்ளார்.
எனினும், இன்று குறித்த இடத்துக்கு சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததுடன் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
தாயின் சமாதி
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர், “ மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் அமைந்துள்ள சிங்கள மயானம் கனரக இயந்திரம் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் எனது தாயின் சமாதி அமைந்துள்ளது. இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவே இனவாதம். நாம் இனவாதத்தை தூண்டும் தேரர்கள் அல்ல. நாம் இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்துள்ளோம். நாம் யாருடைய மயானங்களையும் அழிக்கவில்லை.
கனரக இயந்திரங்களால் சுத்தப்படுத்தவில்லை. எனது தாயின் சமாதிக்கு அடுத்ததாக இந்துக்களின் மயானம் உள்ளது. அதனை தாண்டி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மயானங்கள் உள்ளன.
இனவாதம்
ஏன் அவற்றை எவரும் கனரக இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யவில்லை? ஏன் சிங்களவர்களின் மயானத்தை மாத்திரம் சுத்தம் செய்கிறீர்கள்? சாணக்கியன் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்.
இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென நான் சிறிலங்கா அதிபர், காவல்துறையினர் உள்ளிட்ட பொறுப்பதிகாரிகளிடம் கோருகிறேன். இவ்வாறாக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களையும் சிங்களவர்கள் வெட்டுவார்கள்.
இதனை தொடர்ந்து, காவல் நிலையத்துக்கு சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமது தாயின் சமாதியை அழிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் கண்ணீர் மல்க கோரியுள்ளார்.
தற்போதைய நிலை
ஏன் எனது தாயின் சமாதியை அழிக்கிறீர்கள்? இந்த நடவடிக்கையை நிறுத்த நான் என்ன செய்ய வேண்டும்? முப்படையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு எனது தாயின் உடலை தகனம் செய்தார்கள்.
அந்த தாயின் சமாதியை தற்போது ஏன் கனரக இயந்திரத்தை கொண்டு சுத்தம் செய்கிறீர்கள்? நான் இந்த விடயம் தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாடின் தற்போதைய நிலை என்ன? இது தொடர்பில் மேற்கொள்ளப்பட் சட்ட நடவடிக்கைகள் என்ன?“ என்ற கருத்துக்களை தெரிவித்ததார்.