வடக்கில் புனர்வாழ்வு நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும்: சார்ள்ஸ் வலியுறுத்து
வடமாகணத்தில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையமொன்று அமைக்கப்பட வேண்டுமென வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் சுதுமலை பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று(30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இது தொடர்பில் கடைசியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாகவும் இதனை அமைக்கும் நடவடிக்கைக்கு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஆதரவளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இணக்கம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “போதைபொருட்களின் பாவனைக்கு அடிமையானவர்கள் ஏனைய மாவட்டங்களில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
இது மக்கள் மனதில் பாரிய குறையாக உள்ளது, புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பட்டுள்ள தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களை நேரில் சென்று காண இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை மக்களுக்கு உருவாகியுள்ளது.
இதற்கு தூரம் ஒரு பாரிய தடையாக உள்ளது, இந்த விடயத்தை நான் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தேவையான உள்கட்டமைப்பு
வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்காக இங்கு புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பில் கடைசியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த கோரிக்கையை நான் கருஜயசூரியவிடம் முன்வைக்க விரும்புகிறேன், வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைக்கு உதவுமாறும் நான் கோர விரும்புகிறேன்.
இதற்கு தேவையான உள்கட்டமைப்பு தொடர்பான ஆதரவை வழங்க நாம் தயாராக உள்ளோம்” என்றார்.