முன்னேற்றத்தில் இருந்து முறிந்து போகும் வடக்கு மாகாணத்தின் கல்வி மரபு!
வடக்கு மாகாணத்தின் கல்வி அமைப்பு, வரலாற்று ரீதியாக, தமிழ் மக்களின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்பட்டு வந்துள்ளது.
இது பல சவால்களையும், மோதல்களையும் தாண்டி, கல்வியறிவு மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளில் முன்னணியில் இருந்த ஒரு பகுதியாகும்.
ஆனால், "கல்வி படிப்படியாக அழிக்கப்படுகிறதா?" என்ற கேள்வி பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு சிக்கலான விடயமாக இன்று மாறியுள்ளது.
இதற்கு பிரதான காரணம், இன்று வெளியாகிய க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சராசரியில் ஏற்பட்ட பின்னடைவு நிலையே.
வடக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் 69.86% மாணவர்கள் மாத்திரமே உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி
2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த எண்ணிக்கை பரீட்சைக்குத் தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.
கூடுதலாக, மொத்தம் 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும்.
இதற்கிடையில், 2.34% மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.
இந்த நிலையை நாம் வடக்கில் கருத்தில் கொண்டால் பரீட்சைக்கு தோற்றும் 5 மாணவர்களில் 1 அல்லது 2 மாணவர்கள் சித்திப்பெறாத நிலை உருவாகிறது.
ஒரு பாடசாலை சிறந்த பெறுபேற்றையோ அல்லது மோசமான பெறுபேற்றையோ பெற்றால் அதற்கு பொருப்பானவர்கள் அப்பாடசாலையின் அதிபர், மற்றும் ஆசிரியர்களே.
அவ்வாறென்றால் மாகாண ரீதியாக பெறுபேறு வீழ்ச்சியடையும்போது அதன் பொறுப்பு யாருடையது?
இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வட மாகாணம் தொடர்ந்து இறுதி நிலையில் இருப்பது ஏற்க முடியாத விடயமே.
1. வடமாகாண கல்வி முறைமையின் பின்னணி
வடமாகாணம், குறிப்பாக யாழ்ப்பாணம், கல்வியில் கடந்த காலங்களில் எப்போதும் முன்னணியில் இருந்தது.
உயர்தரப் பரீட்சைகளில் உயர் சித்தி வீதம், பல்கலைக்கழக நுழைவு, மற்றும் தொழில்முறை கல்வியில் தமிழ் மாணவர்கள் தேசிய மட்டத்தில் பங்களித்து வந்தனர்.
ஆனால், உள்நாட்டுப் போரின் பின்னர், இப்பகுதி பல பொருளாதார, சமூக, மற்றும் உள்கட்டமைப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளன.
2. தற்போதைய சவால்கள்
வடமாகாணத்தில் கல்வி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்கள், குறிப்பாக ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் முறைகேடுகள், கல்வியின் தரத்தை பாதித்துள்ளன.
உதாரணமாக, 2025ஆம் ஆண்டு ஜனவரியில், வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்பில் என்ற போர்வையில், சிரேஷ்ட நிலை கல்வி நிர்வாக அதிகாரிகளை கவனத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக இடமாற்றங்கள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இது கல்வி நிர்வாகத்தில் குழப்பத்தையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நிர்வாக முடிவுகளில் மத்திய அரசாங்கம் அல்லது ஆளுநரின் தலையீடு, கல்வி முறைமையை பலவீனப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது என்று குறிப்பிடுகின்றன.
உதாரணமாக, 2014இல் ஆசிரியர் இடமாற்றங்கள் தேர்தல் சட்டங்களுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது.
இதன்படி இனிவரும் காலங்களிலேனும் ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
3. ஆசிரியர் பற்றாக்குறை
இலங்கை ஆசிரியர் சங்கத்தை மேற்கோள்காட்டி 2024 ஆம் ஆண்டு "40,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாக செய்தி ஒன்றை தென்னிலங்கை பத்திரகை வெளியிட்டிருந்தது.
அதில் வடமத்திய, கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், மத்திய மாகாணத்தில் உள்ள கிராம பாடசாலைகளிலும் இந்த நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்ததாக கூறப்பட்டது.
அதன்படி, கிழக்கு மாகாணத்தில் 3,698 ஆசிரியர் பற்றாக்குறையும், வடமத்திய மாகாணத்தில் 3,860 ஆசிரியர் பற்றாக்குறையும், ஊவா மாகாணத்தில் 3,200 ஆசிரியர் பற்றாக்குறையும், வட மாகாணத்தில் சுமார் 2,900 ஆசிரியர் பற்றாக்குறையும், வடமேல் மாகாணத்தில் 4,500 ஆசிரியர் பற்றாக்குறையும், தென் மாகாணத்தில் 2,900 ஆசிரியர் பற்றாக்குறையும், மேல் மாகாணத்தில் 4,700 ஆசிரியர் பற்றாக்குறையும், மத்திய மாகாணத்தில் 4,800 ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது. மேலும், தேசிய பள்ளிகளில் 3,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது, இது நாடு முழுவதும் மொத்தம் சுமார் 40,000 ஆகும் என தெரிவிக்கப்பட்டது.
இது 2025 இல் 42,000க்கும் மேற்பட்ட அளவாக காணப்படுவதாக கல்விஅமைச்சில் இடம்பெற்ற ஒரு ஊடகசந்திப்பில் உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் சிறிலங்காவின் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்திருந்தார்.
மேலும், வறுமை மற்றும் பொருளாதார பின்னடைவு காரணமாக, பல மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை வடக்கில் இன்றும் தொடர்ந்து வருகிறது.
இதன்படி வடமாகாண கல்விச் சமூகம் இந்தப் பிரச்சினைகளை வெளிப்படையாக விவாதித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இல்லையேல் கல்வித்தரம் மேலும் சரியும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
