இலங்கைக்கு சுற்றுலா வந்த நோர்வே பிரஜைக்கு ஏற்பட்ட நிலை - தீவிர விசாரணையில் காவல்துறை
கண்டியில் இருந்து பண்டாரவளை நீர்வீழ்ச்சியை பார்வையிட ரயிலில் பயணித்த நோர்வே நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் பயணப் பொதிகள், டிரோன் கமரா மற்றும் சுமார் எழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் உள்ளிட்டவற்றை யாரோ திருடிச் சென்றுள்ளதாக எல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சுற்றுலா பயணி எல்ல சுற்றுலா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆளில்லா கமராவை தவிர 25,000 ரூபா பெறுமதியான அப்பிள் கையடக்க தொலைபேசி மற்றும் கைத்தொலைபேசியின் உபகரணங்களும் சூட்கேஸில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் திருட்டு
நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் புகையிரதத்தை நிறுத்திய போது இந்த சூட்கேஸை யாரோ திருடிச் சென்றதாக பயணி கூறுவதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
தீவிர விசாரணையில் காவல்துறை
சுற்றுலா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ஜகத் பொன்சேகாவின் பணிப்புரையின் பேரில் உதவி காவல்துறை அத்தியட்சகர் அதுல பெரேரா, எல்ல சுற்றுலா காவல்நிலைய பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் ரத்னசிறி ஆகியோரின் தலைமையில் பிரதான காவல்துறை குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திருட்டு சம்பவம் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இடம்பெற்றுள்ளமையினால், இது தொடர்பில் நாவலப்பிட்டி காவல்துறைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி காவல்துறையினரும் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
