தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கென தமிழ் பேசும் சுகாதார சேவை அதிகாரிகளை நியமிக்க முடியாது என்கிறார் சன்ன ஜயசுமன
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கென விசேடமாக தமிழ் பேசும் சுகாதார சேவை அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்க முடியாது என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன(Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவை அதிகாரிகள் தமிழ் மொழி புலமை கட்டாயம் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல கேள்வி நேரத்தின்போது, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவிடம் கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் சுகாதார சேவை அதிகாரிகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஔடத வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, சிறீதரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளார். தொடர்ந்தும் பதில் அளித்த அவர்,
தமிழ் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியர்கள் தமிழ் மொழிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும். அதனைவிட பரீட்சையில் அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளுக்கு அமையவே நியமனம் பெற்றுள்ளார்கள். இதில் அரசின் தலையீடோ அல்லது சுகாதார அமைச்சின் தலையீடோ என எதுவும் இல்லை.
அந்த வரிசைக் கிரமத்திற்கு அமையவே நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் விருப்பத்திற்கு அமையவே இது இடம்பெறுகின்றது. ஆகேவே தமிழ் தெரிந்தவர்களை மாத்திரம் நியமிக்குமாறு எம்மால் கோரிக்கை விடுக்க முடியாது.
எவ்வாறெனினும் வடக்கு கிழக்கில் பணியாற்றும் தாதியர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகள் தமிழ் மொழிமூல பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பது கட்டாயம் என்று கூறினார்.