இலங்கையில் இல்லை என்ற யுகம் தான் இப்போது! சபையில் சஜித் குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் தோல்வியடைந்த பொருளாதான முகாமைத்துவம் காரணமாக நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்கள் எவ்வாறு வாழ்வது.
அரச ஊழியர்கள் எவ்வாறு வாழ்வது. நாட்டு மக்கள் எவ்வாறு வாழ்வது. ஆசிரியர்களுக்கு வழங்கிய கொஞ்சத்தையும் சமையல் எரிவாயு விலையை அதிகரித்து பிடித்துள்ளனர்.
எமது நாட்டின் விவசாயிகள் உரம் இல்லாமல், இரசாயன உரம் இல்லாமல், கிருமி நாசினி இல்லாமல் இன்று வீதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெருமையுடன் வாழ்ந்த விவசாயிகள் இன்று வறுமையால் அவதிப்படுகின்றனர்.
7 மூளையுடைய அமைச்சர் ஒருவர் இந்த முறை ஊடாக அனைத்து பொருட்களினதும் விலைகளை குறைப்பதாக கூறினார். தற்போது அந்த 7 மூளைக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இன்று எமது நாட்டில் வரிசை யுகம் ஒன்று உருவாகி உள்ளது. சீனி வரிசை உள்ளது. அரிசி வரிசை உள்ளது. எரிவாயு வரிசை உள்ளது. பால்மா வரிசை உள்ளது.
70 - 77 யுகத்தை தற்போது காணக்கூடியதாக உள்ளது. இதற்காகவா 69 இலட்சம் பேர் மக்கள் ஆணையை வழங்கினர்.
இந்நாட்டு 220 இலட்சம் பொது மக்களையும் வறுமைக்கு தள்ளவா? இந்த அரசாங்கத்திற்கு வேலை செய்ய முடியாது.. விலைகளை அதிகரிக்க மட்டும்தான் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.