யாழில் வேட்புமனு தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி
புதிய இணைப்பு
தேசிய மக்கள் சக்தி யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
இன்று (20) யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தியின் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தலைமையில் இந்த வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.இளங்குமரன் உள்ளிட்ட17 சபைகளுக்கான முதன்மை வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
முதலாம் இணைப்பு
உள்ளூராட்சி சபை தேர்தல் : யாழில் கட்டுப்பணம் செலுத்திய அநுர அணி
உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி (National People's Power) யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
இன்று (14) காலை யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன் (K.Ilankumaran), சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா (S.Sribavanandaraja) உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.
முகவர்களை நியமித்தல்
உள்ளூராட்சி தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கை நேற்று (13) நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இதேவேளை கடந்த 03 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தி
வவுனியா (Vavuniya) மாவட்டத்தின் 5 உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தி இன்று (14.03) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.
அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி ரெலிபோன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
அதற்கான கட்டுப்பணத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தவிசாளருமான முத்து முகமது, முன்னாள் நகர சபை உறுப்பினர்களான அப்துல் பாரி, லரீப், ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி உள்ளடங்கிய கட்சி முக்கியஸ்தர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா
