ஆயுதப் பலத்தால் ஆட்சியைக் கைப்பற்றவில்லை : அரசிற்கு மனோவின் அதிரடி அறிவிப்பு
ஆயுதப் பலம், ஆக்கிரமிப்பு பலத்தால் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்த, முயற்சிக்கும் கட்சிகள் நாம் அல்ல. ஜனநாயகத்தை பாதுகாக்கும் கட்சிகள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா இன்று (20) காலை 9.00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் நடைபெறும் நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கான அலுவலகம் மூன்றாம் மாடியில் அமைந்துள்ளது. அங்கு கட்சித் தலைவர்கள் நாங்கள் எல்லோரும் கூடி நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, நாங்கள் அரசுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக அரசாங்க த்தரப்பு கூறுகிறது.
அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி
மேலும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் மற்றும் ஜீ.எல்.பீரிஸ் (G. L. Peiris) அவர்களின் வீட்டில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் சூழ்ச்சி செய்வதாக தெரிவிக்கின்றனர். நாங்கள் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கவில்லை. ஏன் அரசாங்கம் குழப்பத்திற்கு ஆளாகிறது.
அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் நான் பங்கேற்றேன் எனக்கு நன்கு தெரியும். எவ்வித சட்டவிரோத ஆட்சி கவிழ்ப்பும் இடம்பெறவில்லை. ஆனால் அரசாங்கம் அமைப்பது எவ்வாறு என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசாங்கத்தின் பிழைகளை தேடுகிறோம்.
ரணில் விக்கிரமசிங்க கூட அரசியலமைப்பின் மூலமே ஜனாதிபதி ஆனார். அவர் வங்குரோத்தான நாட்டை கட்டியெழுப்பினார். அவ்வாறு கட்டியெழுப்பட்ட நாட்டையே அரசாங்கம் கைப்பற்றியது.
அரசாங்கம் கூறும் 76 வருட சாபத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.அப்படியென்றால் அதில் 50 சதவீதத்தை ஆட்சிலிருக்கும் பிரதான கட்சியும் பொறுப்பேற்க வேண்டும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
