நண்பர்களுடன் சென்ற மாணவன் சடலமாக மீட்பு!
நுவரெலியா - இராகலை பகுதியிலுள்ள குளத்துக்கு நண்பர்கள் சகிதம் நீராடச்சென்ற மாணவன் ஒருவர், இன்று நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராகலை சூரியகாந்தி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் உ.அபினேஷன் என்ற மாணவரே (வயது – 15) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த மாணவனும், அவரது மூன்று நண்பர்களும் இன்று இராகலை, மந்திரிதென்ன பகுதியிலுள்ள குளமொன்றில் நீராடச்சென்றுள்ளனர். குளத்தில் நீராடிக்கொண்டிருக்கையில் குறித்த மாணவன், சேற்றுக்குள் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார்.
அவரை மீட்பதற்கு முயன்ற மற்றுமொரு மாணவனும் சேற்றுக்குள் சிக்கியுள்ளார். இதனையடுத்து ஏனைய இருவரும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இதனை அறிவித்தனர்.
தீவிரமாக செயற்பட்ட மக்கள் இரண்டாவதாக சிக்கியவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 3 மணிநேர தேடுதலின் பின் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஏனைய இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.