நுவரெலியாவில் திட்டமிடலின்றி நடைபெற்ற வசந்தகால கொண்டாட்டம்- ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் மகன் பங்கேற்பு!
நுவரெலியாவில் முறையான திட்டமிடல் இல்லாமல் வசந்த கால கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டமையே கொரோனா தொற்றாளர்கள் நுவரெலியா மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு காரணம் என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
வசந்த காலம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் முதல் எந்தவிதமான சுகாதார நடைமுறையும் கடைபிடிக்கப்படவில்லை. நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களில் அநேகமானவர்கள் முகக் கவசம் அணியாமலேயே இருந்துள்ளனர். நுவரெலியா மாநகர சபையோ அல்லது சுகாதார பிரிவினரோ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரியவில்லை.
குறிப்பாக முதலாவது நாள் ஆரம்ப நிகழ்வு மலர் கண்காட்சி குதிரைப் பந்தய ஒட்டப் போட்டி ஏனைய விளையாட்டு போட்டிகள் என்பன பாதுகாப்பு நடைமுறை கடைபிடிக்கப்படாமலேயே நடைபெற்றது. நுவரெலியாவிற்கு வசந்த காலத்தின் பொழுது ஜந்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வந்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என நுவரெலியா பொலிசார் ஆங்காங்கே துண்டுப்பிரசுரங்களை காட்சிப்படுத்தியிருந்த போதிலும் அதில் தனியே சிங்கள மொழியில் மாத்திரமே இருந்ததை காண முடிந்தது.
மேலும் வசந்த காலம் ஆரம்பித்த நாள் முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதனை கட்டுப்படுத்தவோ அல்லது அறிவித்தல் ஒன்றை வழங்கி வருகின்றவர்களை கட்டுப்படுத்தவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று பல்வேறு விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகின்றது. இந்த விசாரணைகளுக்கு மத்திய மாகாண ஆளுநரே உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் மத்திய மாகாண அளுநரும் பல முக்கியஸ்தர்களும் வசந்த கால நிகழ்வுகளில் கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கியுள்ளனர். பிரதமரின் பாரியார் பிரதமரின் மகன் யோசித ராஜபக்ச ஆகியோரும் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். எனவே இன்றைய நுவரெலியாவின் இந்த நிலைமைக்கு அனைத்து தரப்பினரும் பொறுப்பு கூற வேண்டும். இது வரையில் 54 பேர் இனம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவுகள் அனைத்தும் கடந்த 28 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற முடிவுகளே.
ஆனால் பி.சி.ஆர் முடிவுகள் வெளிவருவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் தற்பொழுது பொது வெளியில் அல்லது ஆங்காங்கே செய்யப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. தனியே நுவரெலியா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மாத்திரமே செய்யப்படுகின்றன.
தற்சமயம் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த ஒரு சிலருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அதே நேரம் நுவரெலியா மாநகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கும் அவருடைய மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் யார் காரணம்? பொறுப்பு கூற வேண்டியவர்கள் யாரும் இல்லை.
ஒருவர் இன்னொருவர் மேல் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நுவரெலியா மக்களே. எனவே இதற்கான தீர்வு என்ன என்பது யாருக்கும் புரியாமலேயே உள்ளது. எனவே இந்த விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







