சாதாரணதரப் பரீட்சையுடன் தொழிற்கல்வி கற்கும் வாய்ப்பு!
மாணவர்கள் தமது எதிர்காலத்திற்குரிய தொழிற்கல்வியைப் பெற்றுக்கொள்ள உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர முகாமைத்துவம் தொடர்பான பணிப்பாளர் சமன் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
மாறாக இனி சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்த பின்னரே தொழில்பயிற்சிகளில் இணைந்து கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட '101 உரையாடல்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வர்த்தமானி அறிவித்தல்
"கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.
நாடளாவிய ரீதியில் உள்ள 525 பாடசாலைகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது மாத்திரமல்லாமல், தொழிற்பயிற்சி நிலையத்தினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
அதன் பின்னர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
மேலும், இந்த கற்கைநெறிகளில், தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு பாடநெறிகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் படி, முதலாம் ஆண்டு தொழிற்கல்வியும், இரண்டாம் ஆண்டில், தொழில் பயிற்சி நிறுவனமொன்றின் ஊடாக NVQ தரச் சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த NVQ 4 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னர் டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் பட்டப் பின் படிப்பு வரை கற்க முடியும்.
சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டே உயர்தரத்தில் கற்பதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது.
ஆனால் சாதாரண தரத்தில் சித்தி பெறாத மாணவர்கள், கல்விச் செயல்பாட்டில் இருந்து விலக்கிச் செல்கின்றனர்.
வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்கள்
இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், பாடசாலையின் ஊடாக மாணவர்களை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதற்காக, இந்தக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத்திட்டத்தின் மூலம் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் பரீட்சையில் சித்தியடைந்தாலும் இல்லாவிட்டாலும் தொழிற்கல்விக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் தொழில்வாண்மையாளர்களாக வெளிநாடு செல்ல விரும்பும் பலர், தொழில்சார் கல்விக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்பதனால்,
அவர்களுக்குத் தேவையான மொழி அறிவைப் பெறுவதற்கு குறுகிய காலப் பாடநெறிகளும், மோட்டார் மெக்கானிக், வெல்டிங் டெக்னீஷியன், விவசாய உதவியாளர், ஹோட்டல் துறை போன்ற எந்தத் துறையிலும் கணினி அறிவு பெற்றிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அடிப்படை கணணிப் பாடநெறிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொழிற்கல்வி திட்டங்கள் இலங்கையில் 525 தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை, 13 வருட தொடர்ச்சியான கல்வித் திட்டத்தின் மூலம், அவர்கள் பாடசாலைகளில் இருந்தே தொழிற்கல்வியைத் தொடரும் திறனைப் பெற்றுக்கொள்வதால், கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
மேலும், உயர் தரத்திற்குப் பிறகு பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்கள் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்பயிற்சி ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட 1400 தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் மூலம் தங்களுக்கு விருப்பமான தொழில் பயிற்சியைத் தொடர வாய்ப்பிருப்பதனால், இது தொடர்பான தகவல்களை www.tvec.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்