சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய அதிகாரிகள் இன்று நீதிமன்றில் முன்னிலை
சட்டவிரோதமாக கடவுச்சீட்டு வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் இன்று (18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களான ஹீனட்டியான மகேஷ் எனப்படும் நிரேஷ் சுபுன் தயாரத்ன மற்றும் மத்துகம ஷான் எனப்படும் ஷான் அரோஷ் லியனகே ஆகியோருக்கு கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் வவுனியா நீதவான் நீதிமன்றத்திலும் மற்றைய சந்தேகநபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்திலும் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
காவல்துறைமா அதிபர் தெரிவிப்பு
தற்போது குடிவரவுத் திணைக்களத்தில் கடமையாற்றும் சந்தேகநபரான பிரதிக் கட்டுப்பாட்டாளர், ஹீனட்டியான மகேஷ் என்ற குற்றக் கும்பல் உறுப்பினருக்கு மாணிக்குகே தினேஷ் சில்வா என்ற போலிப் பெயருடன் குடிவரவு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலம் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த அதிகாரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான மத்துகம ஷானுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதி கட்டுப்பாட்டாளரினால் முறையற்ற வகையில் கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் தலைமறைவு
தொடங்கொட லியனகே ராஜேஷ் என்ற போலி பெயரில் குடிவரவு திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தினால் குறித்த கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான குறித்த அதிகாரி தற்போது ஓய்வூதிய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றுவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களான ஹீனட்டியான மகேஷ் மற்றும் மத்துகம ஷான் ஆகியோர் தற்போது டுபாயில் தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |