ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை இழுபறி: சவாலை எதிர்நோக்கும் சர்வதேச எண்ணெய் சந்தை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தொடர் சிக்கல் ஏற்பட்டு வருகின்றன.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகக் தட்டுப்பாடு மீண்டும் உருவாகலாம் என்ற அச்சமே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
எண்ணெய் சந்தை
இதனடிப்படையில் எண்ணெய் சந்தையின் தற்போதைய நிலவரம்:
- பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude): பீப்பாய்க்கு $1.27 (1.39%) அதிகரித்து $92.76 ஆக விற்பனையானது.
- டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் (WTI Crude): பீப்பாய்க்கு 49 சென்ட்கள் (0.57%) உயர்ந்து $86.53 ஆக நிலைபெற்றது.

ஈரான் தன்வசம் வைத்துள்ள 60 வீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வேறு நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரானிய உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் முற்றிலும் நிராகரித்துள்ளது.
அத்தோடு போரை முடிவுக்குக் கொண்டுவர அணுஆயுத விவகாரங்களில் ஈரான் நெகிழ்வுத்தன்மை காட்ட வேண்டும் என்பதில் வாஷிங்டன் உறுதியாக உள்ளது.
இராணுவத் தாக்குதல்கள்
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்கள் தேவையற்றது எனக் கூறியதையடுத்து முந்தைய வர்த்தகத்தில் எண்ணெய் விலை பீப்பாய்க்கு மூன்று டொலர் வரை சரிந்து இரண்டு மாதக் குறைந்தபட்ச அளவை எட்டியிருந்தது.

எனினும் இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை என்ற ஈரானின் அறிவிப்பும் மற்றும் யுரேனிய விவகாரமும் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தொடர்ந்து எண்ணெய் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையிலும் அணுஆயுதச் செறிவூட்டல் தொடர்பான விவாதங்களில் ஈரான் விட்டுக்கொடுக்க மறுப்பதாலும் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நிச்சயமற்ற தன்மை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |