இந்தியாவில் உயர்வடையும் ஒமிக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கை
இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று 3-வது நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் மாநில சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்த, 72 வயதான ஒருவர் சில நாட்களுக்கு முன்பு சிம்பாப்வே நாட்டில் இருந்து இந்தியா திரும்பினார். அவருக்கு கடந்த வியாழனன்று, கொரோனா பொசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்றையதினம் அவருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர் தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்த விபரங்கள் பெறப்பட்டு, அவர்களிடமும் பரிசோதனை நடத்த குஜராத் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முன்னதாக பெங்களூருவைச் சேர்ந்த 46 வயதான மருத்துவர் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அந்த மருத்துவர் ஒமிக்ரோன் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்லாதவர். மேலும் இவரிடம் தொற்று ஏற்பட்டதற்கான, எந்த அறிகுறியும் காணப்படவில்லை. இதேபோன்று தென் னாபிரிக்காவை சேர்ந்த 66 வயதான நபர் ஒருவர், கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு ஒமிக்ரோன் பொசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது.
தற்போது மொத்தம் 3 பேருக்கு இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை மொத்தம் 35 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவியிருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது.