சிறுவர்களை அதிகளவில் தாக்கும் ஒமிக்ரோன் -மருத்துவ நிபுணர்கள் கவலை
தென்னாபிரிக்காவில் குழந்தைகளுக்கு ஒமிக்ரோன் கொரோனா திரிபு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தென்னாபிரிக்கா மற்றும் போஸ்ட்வானாவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் திரிபு தற்போது 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோனை கவலைக்குரியதாக அறிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், அதன் பரவல் வேகமும் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
ஒமிக்ரோன் முதலில் கண்டறியப்பட்ட பல்கலைகழக மாணவர்களுக்கு மிகவும் இலேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதால், அறிகுறிகள் இலேசானதாக இருந்திருக்கலாம் எனவும் கூறியுள்ளது.
ஒமிக்ரோன் திரிபால் வயதானவர்கள் பாதிக்கப்படும் போது அறிகுறிகள் கடுமையானதாக இருக்கும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
தென்னாபிரிக்காவில் குழந்தைகளுக்கு ஒமிக்ரோன் கொரானா திரிபு அதிக அளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் முதல் மூன்று அலைகளின் போது குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை என்றும் தற்போது அதிக அளவிலான குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் 15 முதல் 19 வயது வரை உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டது முதல் தென்னாபிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள் தோறும் இருமடங்காக அதிகரிக்கிறது. இது டெல்டா திரிபை விட பன்மடங்கு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் அங்கு தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வோமா வீக் என பெயரிட்டு டிசம்பர் 10- ஆம் திகதி வரை நாடு முழுவதும் முழு வீச்சில் தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.