பிளாஸ்டிக்கில் அதிகநாட்கள் உயிர்வாழும் ஒமைக்ரோன் வைரஸ் - வெளிவந்த ஆய்வு தகவல்
தற்போது உலகை அச்சுறுத்திவரும் ஒமைக்ரோன் வைரஸ் பிளாஸ்டிக்கில் 8 நாட்களும் தோலில் 21 மணிநேரமும் உயிர் வாழுமென ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் ஏனைய திரிபுகளான அல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டாவை விடவும் ஒமைக்ரோன், பிளாஸ்டிக் மற்றும் தோலில் உயிர் வாழும் தன்மையின் வீதம் அதிகமென கூறப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள கியோட்டோ மாகாண மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
மதுசாரம் அடங்கிய தொற்றுநீக்கி திரவத்தை பயன்படுத்தினால் ஒமைக்ரோன் உள்ளிட்ட அனைத்து திரிபுகளையும் 15 நொடிகளில் செயலிழக்கச் செய்து விடலாம் என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின்போது, சீனாவின் வுகானில் உருவான கொரோனா தொடங்கி பல்வேறு மாறுபாடுகள் வரையில், சுற்றுச்சூழல் தன்மையின் வேறுபாடுகளை ஆராய்ந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பிளாஸ்டிக் பரப்பின் மீது 56, அல்பா 191.3, காமா 59.3, பீட்டா 156.6, டெல்டா 114 மணி நேரம் வாழும். ஒமைக்ரோன் 191.3 மணி நேரம் வாழும்.
ஒமைக்ரோன் தோலில் 21 மணி நேரத்திற்கு மேலாக உயிர் வாழ்கின்ற நிலையில், அல்பா 19.6, பீட்டா 19.1, காமா 11, டெல்டா 16.8 மணி நேரம் உயிர் வாழுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
