இலங்கையில் அதிகரிக்கும் ஒமைக்ரோன்! கம்பஹாவில் இருந்து மற்றுமொரு கொத்தணியா?
கம்பஹா - வெலிவேரிய பகுதியில் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஹர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐந்து பேரை கொண்ட குடும்பத்தில் இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்தும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,
50 மற்றும் 25 வயதான தந்தை மற்றும் மகள் ஆகியோரே ஒமிக்ரோன் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், இருவருக்கும் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் ஊடாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை மஹர சுகாதார வைத்திய அதிகாரி நிஹால் கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய மூவருக்கும் நோய் அறிகுறிகள் தென்படுகின்ற நிலையில், அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒமைக்ரோன் தொற்று எவ்வாறு பரவியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் சீதுவ பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வருவதாகவும், இருவரும் பஸ்ஸிலேயே பயணித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஒமைக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் வீட்டிற்கு வருகைத் தந்த கம்பஹா பகுதியைச் சேர்ந்த உறவினர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள், சமூகத்திற்குள் இருந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.