சிறிலங்கா விரையும் ஐ..நாவின் சிறப்பு அதிகாரி
ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரான ரொமோயா ஒபோகாட்டா (Tomoya Obokata) எதிர்வரும் 26 ஆம் திகதி சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.
அவர் தனது பயணத்தில் சிறிலங்காவில் பல்வேறு பொருளாதாரத் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உண்மை நிலைமைகளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.
இவரது அறிக்கை சிறிலங்காவுக்கு பாதகமாக அமைந்தால் சிறிலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை உட்பட்ட சலுகைகள் இடைநிறுத்தப்படும் என்பதால் சிறிலங்கா இந்தப் பயணத்தில் அவதானம் எடுத்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளரான ரொமோயா ஒபோகாதாவின் பயணம் அமையவுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி அவர் சிறிலங்காவுக்கு வரவுள்ள இவர், டிசம்பர் 3 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்து சிறிலங்காவில் தொழிலாளர்கள் நவீன அடிமைத்தனத்துக்கு ஆளாக்கப்படுகின்றார்களா என்பது குறித்த ஆய்வுகளை செய்யவுள்ளார்.
அத்துடன் தொழிலாளர் உரிமைக்கான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும் கண்காணிக்கவுள்ளார்.
இதனைவிட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் குடிசார் சமூக பிரதிநிதிகளுடனும் அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
தனது பயணத்தின் முடிவில் டிசம்பர் 3 வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தில் அவர் ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளார்.
அடுத்தவருடம் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் ரொமோயா ஒபோகாதா தனது சிறிலங்கா குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது அறிக்கை சிறிலங்காவுக்கு பாதகமாக அமைந்தால் சிறிலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை உட்பட்ட சலுகைகள் இடைநிறுத்தப்படும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.