தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்மேடு சரிவு: தடைப்பட்டுள்ள போக்குவரத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை விசேட அதிரடிப்படையினர் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னதுவ மற்றும் இமதுவக்கு இடையில் 102 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகாமையில் வீதியின் இருபுறங்களிலும் உள்ள மலைகள் சரிந்து வீழ்ந்துள்ளன.
இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்களை விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களுக்கு எச்சரிக்கை
மேலும் மண் சரிவு காரணமாக மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் கொழும்பில் இருந்து பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்னதுவ சந்திப்பில் இருந்து வெளியேறவும், மாத்தறையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இமதுவ சந்திப்பில் இருந்தும் வெளியேறவும் என்று சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.