ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி வெளியிட்டுள்ள தகவல்
ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியானது பொதுமக்களின் கருத்துக்களைப் பெற தீர்மானித்துள்ளது.
அதன்படி, தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது குழுக்கள் முன்வைக்கும் பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் தபால் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பட முடியும் என ஒரு நாடு, ஒரே சட்டம் குறித்த ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற வியடத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து சட்ட வரைவை தயாரிப்பதற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட செயலணியை கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ நியமித்திருந்தார்.
எனினும் அதன் உறுப்பினர்களான பேராசிரியர் தயானந்த பண்டா மற்றும் விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப் ஆகியோர் பின்னர் குறித்த செயலணியில் இருந்த விலகியிருந்தனர்.
பின்னர் இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகிய மூவரும் புதிததாக செயலணிக்கு நியமிக்கப்பட்டனர்.
தற்போது 14 உறுப்பினர்களுடன் இயங்கிவரும் ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியானது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்பிரகாரம் பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் செயலாளர், ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, தபால் பெட்டி இலக்கம் 504, கொழும்பு என்ற முகவரிக்கோ ocol.consultations@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.