அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி
அவுஸ்திரேலியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் கடித்து கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியா - பெர்த்தில் பகுதியில் இருந்து சுமார் 390 கிலோமீட்டர் (240 மைல்கள்) தெற்கே, அல்பானி நகருக்கு அருகிலுள்ள மைக்கேல்மாஸ் தீவில், மாநிலத்தின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் இந்தத் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
குறித்த நபர் தனது குடும்பத்துடன் ஈட்டியை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
மேலும், “அவர் கரைக்குக் கொண்டுவரப்பட்டார், அங்கு மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். வருந்தத்தக்க வகையில், அவரை மீண்டும் உயிர் பெறச் செய்ய முடியவில்லை," என்று காவல்துறை அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

மைக்கேல்மாஸ் தீவுக்கு அருகே, அடையாளம் தெரியாத இனத்தைச் சேர்ந்த 4.5 மீட்டர் (14.8 அடி) நீளமுள்ள சுறா ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாவது தாக்குதல்
இதன்படி அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் உள்ள கென்னடி ஷோல் பகுதியில் ஒருவரை சுறா கடித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது .
சில நாட்களுக்கு முன்பு பெர்த் அருகே உள்ள ராட்னெஸ்ட் தீவுக்கு அருகே 38 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த மரணம் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவுஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சுறா தாக்குதல்கள் நிகழ்கின்றன.
ஆனால் பாதுகாப்பு குழுக்களின் தரவுகளின்படி, அவற்றில் பெரும்பாலானவை உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. சுறா கடியால் இறப்பவர்களை விட நீரில் மூழ்கி இறப்பவர்களே மிக அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |