கபில சந்திரசேனவின் மர்ம மரணம் : விசாரணையில் நீதிமன்றம் கடும் அதிருப்தி
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதம அதிகாரி கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் நிகழ்ந்து கிட்டத்தட்ட 76 நாட்கள் ஆகியும் மரணம் தொடர்பான விசாரணையின் முக்கிய அம்சங்கள் இன்னும் பூரணமாக மேற்கொள்ளாததை இட்டு நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சந்திரசேனவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் கொழும்பு குற்றப் பிரிவு (CCD), முன்னாள் விமான நிறுவன நிறைவேற்று அதிகாரியால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கைபேசியின் பூட்டை(lock) இன்னும் திறக்க முடியவில்லை என தெரியவந்துள்ளது.
நீதிபதி கடும் அதிருப்தி
நேற்று(22) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்திரசேனவின் கைபேசியின் உள்ளடக்கங்களை அணுகும் முயற்சியில், தடயவியல் பரிசோதனைக்காக அதனை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன, விசாரணையின் வேகம் குறித்து அதிருப்தி தெரிவித்தார். "சம்பவம் நடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்ட அதே விளக்கம்தான் இது. இந்த விஷயத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் எனக்கு திருப்தி இல்லை," என்று நீதிபதி கூறினார்.
பிரேத பரிசோதனை அறிக்கை
சந்திரசேனா இறந்து கிடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான மருந்துகள் மீதான தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைக்காக புலனாய்வாளர்கள் இன்னும் காத்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சந்திரசேனாவின் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் விசாரணையின் போது தெரியவந்தது. கபில சந்திரசேனாவின் மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்த விசாரணை தொடர்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 19 மணி நேரம் முன்