தனியார் துறை ஊழியர்களுக்கான தொடருந்து பருவச்சீட்டு : வெளியான அறிவிப்பு
தனியார் துறை ஊழியர்களுக்கான தொடருந்து பருவச்சீட்டு குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தனியார் துறை ஊழியர்களுக்காக இணைய வழி ஊடாக தொடருந்து பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொடுக்கும் வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று (21) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அரச துறை ஊழியர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், அரச துறை ஊழியர்களுக்காக இணையவழி ஊடாக தொடருந்து பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கமைய ஒக்டோபர் மாதம் அளவில் எந்தவித சிக்கல்களுமின்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த இணைய வழி தொடருந்து பருவச்சீட்டு வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன், நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில் புதிய சட்ட விதிகளும் ஒழுங்குவிதிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கட்டாயமாக்கப்பட்டுள்ள ஆசனப்பட்டி
எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் பயணிகளும் பாதுகாப்புக் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் சாரதிகளுக்குப் பத்து நாட்களுக்கான விசேட பயிற்சி வழங்குவதற்கும், சாரதிகளை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக நடமாடும் போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும், தரம் வாய்ந்த மற்றும் பாதுகாப்பான வாகனங்களை மாத்திரம் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு SLS தரத்திலான பாதுகாப்புத் தலைக்கவசங்களின் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிளுக்கென்றே தனியான ஒழுங்கு ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |