விடுதலைப் புலிகளை குறித்து எழுத தமிழர்களுக்கு மட்டும் ஏன் கருத்துச் சுதந்திர மறுப்பு…
படைப்புச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின், சமூகத்தின் திறன்களை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடு மட்டுமல்ல, கருத்துருவாக்கங்களின் வழியாக அந்நாட்டை வளர்த்தெடுக்கும் பணியுமாகும்.
இந்த உலகில் நாம் கடந்து வந்த பாதைகளை மாத்திரமின்றி, எதிர்காலத்தில் வரப்போகும் உயரங்களையும் கூட படைப்பாளிகள் தமது படைப்புக்களின் வழியாக சித்திரித்துள்ளார்கள். எல்லாத் தேசங்களிலும் அது இயல்பாக நிகழ்ந்திருக்கிறது. படைப்பிலக்கியங்களின் வழியாக பேசப்படும் கருத்துக்கள் படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தினால் ஆனது.
ஒரு படைப்பாளி எந்தப் பக்கம் நின்று எந்த நியாயத்தை வலியுறுத்துகிறார் என்பதும் அவர் வாழும் காலத்தையும் சூழலையும் பொறுத்தது. காலத்தினால் உருவாக்கப்படும் படைப்பாளியும் படைப்புக்களும் இந்தப் பூமிக்கும் அவர் வாழும் தேசத்திற்கும் உரித்துடையன.
படைப்பாற்றல் தேசத்தின் வளர்ச்சி
படைப்புக்கள்மீதும் படைப்பாளிகள்மீதும் எவரும் விமர்சனங்களை முன்வைக்கலாம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் படைப்பாளிகளை விசாரணைக்கு உட்படுத்துதல் என்பது ஒரு நாட்டில் ஆரோக்கியமான விடயம் இல்லை.
படைப்பு சுதந்திரத்தை ஒடுக்குவதும் அச்சுறுத்துவதும் தான் பயங்கரமானது. கருத்துக்களால் ஒரு சமூகம் தன்னை வளர்க்கவும் கட்டமைக்கவும் அபிவிருத்தி செய்துகொள்வதும் உரித்துடையது.
எல்லாத் திறன்களுக்கும் அடிப்படையாக எழுத்துத் திறனைக் கொள்ள வேண்டும். படைப்பாற்றல் உள்ள ஒரு சமூகம் தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கும். அது தேசத்தின் மேம்பாடாகவே பலன் கொடுக்கிறது.
படைப்பாற்றலை விருத்தி செய்யத் தவறுகிற சூழலும், படைப்பாற்றல் குன்றுகிற தருணமும் தேசத்தின் சந்ததிகள்மீது ஏற்படுத்துகிற தாக்கம் அரசியல், பண்பாடு, அபிவிருத்தி என அனைத்துத் துறைகளிலும் பெருந்தாக்கம் செலுத்திவிடும்.
2022ஆம் ஆண்டில் சர்வதேச புகழ் பெற்ற புக்கர் விருதினை ஷெஹான் கருணாதிலக என்ற சிங்கள எழுத்தாளர் பெற்றுக்கொண்டார். இலங்கையில் இருந்து முதன் முதலில் இப்படி சர்வதேசப் புகழ் பெற்ற விருதை சிங்கள எழுத்தாளர் ஒருவர் பெற்றிருப்பது சிங்கள இலக்கியத்திற்கு உலகளவில் ஏற்பட்ட கவனமாக கொள்ளப்படுகிறது.
அதேவேளை The Seven Moons of Maali Almeida என்ற அந்த நாவல், எதைப் பற்றியது என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். இலங்கையில் நடந்த போர் தொடர்பான பாதிப்புக்களை மையமாக வைத்தே அந்த நாவல் எழுதப்பட்டது.
அந்த நாவல் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை பேசுகின்ற நாவல் அல்ல என்றே சொல்லப்படுகிறது. ஆனாலும் போரை மையப்படுத்தியதாக அந்த நாவல் எழுதப்பட்டதும், அது சர்வதேச விருது ஒன்றைப் பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்க சாதனையாக கொள்ளப்படுகிறது.
யோகேந்திரநாதனுக்கு மதிப்பளிப்பு
இப் பத்தியை எழுதும் நான் ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாளியாகவும் இயங்கி வருகின்றேன். அதுவே எனது முதன்மை அடையாளமும் செயற்பாடும்கூட. வாசிப்பு, உரையாடல் என்பன ஒரு படைப்பாளியின் அடிப்படைச் செயற்பாடுகள் ஆகின்றன.
எமது பிரதேசத்தில் வெளிவந்த ஒரு நாவல் குறித்து ஒரு வெளியீட்டு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் தற்போது நோய்மை நிலையில், கைகால்கள் முழுமையாக இயங்க முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றார்.
அவர் இறுதியாக எழுதிய 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவலை வெளியிட்டுத் தருமாறு அணுகியிருந்தார். ஒரு மூத்த எழுத்தாளரை மதிப்பளிப்பு செய்வது முக்கியமான கடமை. அதுவும் அவர் வாழ்கின்ற காலத்தில் அதைச் செய்வதுதான் மகோன்னதமானது.
அந்த அடிப்படையில் அவரின் விருப்புக்கு இணங்க அவரது நிதி மூலதனத்துடன், அவரால் அச்சிட்டு எமக்கு வழங்கப்பட்ட நூலை கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையில் வெளியிட்டு இருந்தோம்.
தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பின் ஊடாக வெளியீட்டு விழாவை நடாத்தியிருந்தோம். அந்த அமைப்பின் தலைவர் என்ற வகையில் வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமை தாங்கியிருந்தேன்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தபால் அதிபராக கடமையாற்றிய யோகேந்திரநாதன், பத்திரிகைகளின் வழியாக மாத்திரமன்றி வானொலி ஊடகத்தின் வழியாகவும் மக்களால் அறியப்பட்டவர். அவரது வெளியீட்டு விழாவுக்கு மக்கள் அரங்கை நிறைத்துக் கலந்துகொண்டிருந்தனர்.
பாரபட்சமாக கருத்துச் சுதந்திரம்
குறித்த நிகழ்வினை நடாத்தியமைக்காக கடந்த 11ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த புத்தகம் எதைப்பற்றியது? விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் விடயங்கள் அதில் இடம்பெற்றுள்ளனவா? எதற்காக நீங்கள் அந்தப் புத்தகத்தை வெளியிட்டீர்கள் என்பன போன்ற கேள்விகள் முதன்மையாகக் கேட்கப்பட்டன.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான பதிவாகவே அந்த நூல் அமைந்துள்ளது. விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்கின்ற கருத்துக்கள் எதுவும் அந்த நூலில் இடம்பெறவில்லை என்ற பதில்களை பதிவு செய்திருந்தேன்.
விடுதலைப் புலிகள் தொடர்பான விடயங்கள் தமிழில் வெளிவருவதைக் காட்டிலும் சிங்களத்தில்தான் அதிகம் வெளிவருகின்றன. தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தமிழர்களின் தேசத்தில் தடைவிதிக்கப்படுகிறது. ஆனால் பிரபாகரன் என்ற பெயரில் தென்னிலங்கையில் திரைப்படம் வெளியிடப்படுகிறது.
தமிழ் மக்களும் தமிழ் தலைவர்களும் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசினால் பயங்கரவாத தடைச்சட்டங்கள் பாய்கின்றன. ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் என்ற பெயரை தாராளமாக உச்சரித்து அரசியல் செய்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கும் ஜேவிபிக்கும் வித்தியாசம் இல்லை என்று இன்றைய நாட்களில் நாமல் ராஜபக்ச கூறுகிறார்.
தலைவர் பிரபாகரனை புகழ்ந்த இராணுவ மேஜர்
இறுதி யுத்தத்தில் ஈடுபட்ட மேஜர் கமால் குணரத்தின நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலை எழுதியிருந்தார். அதில், “பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது. அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார்.
சிறிலங்கா இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனைக் காண முடியவில்லை. அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார்…” என்று எழுதியிருக்கிறார்.
சிறிலங்கா இராணுவத்தரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் புரிந்திருந்தாலும் அவர்களின் வீரத்தையும் ஒழுக்கத்தையும் நிராகரிக்க முடியாது. விடுதலைப் புலிகளைப் பற்றியும் கடந்த கால யுத்தம் பற்றியும் தமிழ் எழுத்தாளர்கள் எழுதினால் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடு என்றால், கமால் குணரத்தின எழுதியும் அத்தகைய செயற்பாடா? அவர்மீதும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை நடத்துமா?
இலங்கையில் காலம்காலமாக தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் இந்தப் பாரபட்சம் தான் எல்லாப் பிரச்சினைகளினதும் அடிப்படையாக இருக்கிறது. என்னிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, முள்ளிவாய்க்கால் யுத்த முடிவில் தலைவரால் ஆயுதமௌனிப்பு அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ் மக்கள் எவரும் ஆயுதப் போராட்ட வழிக்கு செல்ல மாட்டார்கள் என்பதையும் அவ்வாறு சென்றால், அது தமிழ் மக்களுக்கு எதிரானவர்களின் சதியாயிருக்கும் என்றும் முன்வைத்தேன்.
படைப்புச் சுதந்திரம்மீது இத்தகைய அழுத்தங்களை மேற்கொள்வது ஒரு சமூகத்தின் படைப்பாற்றலை தடுக்கும். படைப்பிலக்கிய முயற்சிகளை இல்லாமல் செய்யும். அது சமூக வீழ்ச்சிக்கு மாத்திரமல்ல, ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கும் பெரும்தடையாய் அமையும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 14 April, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.