எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு
நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமான போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) கருப்புப் பட்டி அணிந்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 27 பேரின் மரணத்திற்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சியினர் இவ்வாறு கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல் தொடர்பாக அரசாங்கத்தின் பதில் போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
நீதி கிடைக்க வேண்டும்
இந்தச் சம்பவம் குறித்து விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.
குறித்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
கடந்த 6 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் சிறைக்கைதிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகி சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |