பிழையான அரசியலை சரியான திசையிலே கொண்டுவருவதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது!
கடந்த பத்து வருடங்களாக பிழையான திசைக்கு இந்த அரசியலை கொண்டுசென்ற தரப்புகள் கூட தவிர்க்க முடியாமல் இன்று சரியான பாதைக்கு வந்திருக்கின்றது.
இந்த நிலைமை மேலும் பலப்பட எங்கள் மக்களினது ஆதரவும் எழுச்சியும் அத்தியாவசியம் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலான போராட்டம் காலை 8 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து ஆரம்பித்து யாழ் சென்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், எம்மை பொறுத்தவரையில் 2009க்கு பிற்பாடு தமிழ் அரசியல் ஒரு பிழையான திசையில் சென்றுகொண்டிருந்த ஒரு நிலையிலே இன்று அந்த பிழையான அரசியலை சரியான திசையிலே கொண்டுவருவதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது.
மக்களை திசைமாற முடியாத அளவிற்கு சாவல்விடுகின்ற வகையிலேயே மக்கள் அணிதிரண்டு,தெளிவான செய்தியை அனைத்து தரப்புகளுக்கும் வழங்கவேண்டும்.
போர்முடிவடைந்த பின்னர் எழுக தமிழ் நிகழ்வு மிக வெற்றிகரமாக நடைபெற்றது,
ஆனால் வடகிழக்கு அனைத்தையும் இணைத்து தமிழ்பேசும் மக்கள் என்ற எங்கள் முஸ்லிம் மக்கள் முழுமையாக ஆதரிக்ககூடிய இந்த போராட்டத்தை அங்கீகரிக்ககூடிய வகையிலே யாழ் குடாநாட்டிலே இருக்கின்ற மக்கள் மாத்திரமல்ல வடக்குகிழக்கில் இருக்கின்ற அனைத்து மக்களும் கரங்களை பலப்படுத்தவேண்டும். என்றார்.