தமிழர் தாயகத்திற்குள் நுழைந்த மற்றுமொரு நாடு - ரகசிய நகர்வு அம்பலம்
தமிழர் தாயகத்தில் உள்ள தீவகத்தில் சீனாவின் முதலீடுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது சிறிலங்காவிற்கான பாகிஸ்தான் தூதுவரும் இரகசியமான முறையில் நெடுந்தீவிற்கு விஜயம் மேற்கொண்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் (Vinthan Kanakaradnam) தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்தியாவிற்கு அருகில் உள்ள குறித்த தீவுப் பகுதிகளில் அதனை எதிரி நாடுகளின ஊடுருவலானது தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் பாரத தேசத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ புலம்பெயர் தேசங்களில் இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு தெரிவித்திருக்கின்றார்.
வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா,கனடா, ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர் தேசங்களில் இயங்கக்கூடிய அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. கறுப்பு பட்டியலில் சேர்த்து இருக்கின்றது.
அந்த அமைப்புகள் எல்லாம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற தொடர்ச்சியாக போராடுகின்ற அமைப்புகளை, கடந்த காலங்களில் பயங்கரவாதத்துக்கு துணை போகின்ற அமைப்புகளாக முத்திரை குத்தி தடை செய்தனர். ஆனால் அந்த அமைப்புகளை தடை செய்து வைத்துக்கொண்டு அந்த அமைப்புக்களோடு பேசப்போகின்றோம் என்ற செய்தி நகைப்புக்கிடமாக எண்ணத் தோன்றுகின்றது.
அரசாங்கம் முதலில் அந்த அமைப்புகளை தடைப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அத்தோடு அரசாங்கத்துக்கு ஊதுகுழலாக இணைந்து செயற்படுகின்ற பல அமைப்புகளும் வெளிநாடுகளில் இருக்கின்றன. அத்தகைய அமைப்புகளோடு அரசாங்கம் பேசுவார்களாக இருந்தால் அதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
வடக்கு கிழக்கிலே பெரும்பான்மையான தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்திலும் பலர் பங்கு கொண்டிருக்கின்றார்கள். இந்தப் இனப்பிரச்சினை விவகாரங்களை எங்களை விடுத்து புலம்பெயர் அமைப்புகளோடு பேசப்போகிறோம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதே நேரத்தில் புலம்பெயர் அமைப்புகள் குறிப்பாக, சில நிபந்தனைகளை விதித்து இருக்கின்றன. இதய சுத்தியுடன் அரசாங்கம் தமிழர்களின் விடயத்தில் நேர்மையாக நீதியாக நடக்கவேண்டும்.
வெளிநாடுகளிலே ஒரு பேச்சு இலங்கையிலே இன்னொரு பேச்சு.
இப்படியாக இரட்டைவேடம் போடுகின்ற இந்த அரசியலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.