பல்லேகம தேரரின் மரபணு பரிசோதனை : இரத்த மாதிரியை வழங்குமாறு உத்தரவு
அநுராதபுரத்தில் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, குறித்த பிக்குவின் மரபணுவை பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவருடைய இரத்த மாதிரியை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பல்லேகம தேரர் இன்றைய தினம் (16) அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குச் சென்று, அரச பகுப்பாய்வாளரிடம் தனது இரத்த மாதிரியை வழங்குமாறு அண்மையில் உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு
மேலும், இரத்த மாதிரியை வழங்கிய பின்னர் மேற்கொள்ளப்படும் மரபணு பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அரச பகுப்பாய்வாளருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நிட்டம்புவ காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக அறிக்கை ஒன்றின் மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த தகவல்களை கருத்திற்கொண்டு அனுராதபுரம் பிரதம நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், மரபணு பரிசோதனைக்காக அரச பகுப்பாய்வாளரிடம் முன்னதாக அனுப்பப்பட்டிருந்த, சிறுமியால் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் அரச பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் அறிக்கையின் ஊடாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மரபணு பரிசோதனை
அதற்கமைய, வழக்குப் பொருட்களாகப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஆடைகள் தொடர்பாக அரச பகுப்பாய்வாளர் மரபணு பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.

சிறுமியின் ஆடைகளில் மரபணு காணப்படுவது அந்தப் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
அனுராதபுரம் சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் சந்தேகநபரான பிக்கு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |