நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது : வெளியானது வர்த்தமானி
நாடாளுமன்ற அமர்வினை ஒத்தி வைத்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (26) நள்ளிரவு முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வு ஒத்தி வைக்கப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் அதிபரிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் நானடாளுமன்றத்தை இன்று நள்ளிரவு முதல் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழுக்கள் நிறுத்தப்படும்
அவ்வாறு, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு நிறைவுபெறுவதோடு கோப், கோபா உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின் நாடாளுமன்ற குழுக்களின் புதிய தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் மீண்டும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
புதிய அங்கத்தவர் நியமனம்
இதன்போது, முன்னைய தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தின் அமர்வு நேற்றைய தினம் ஒத்தி வைக்கப்படுவதாக இருந்த போதும் சில காரணங்களினால் அதனை மேற்கொள்ள முடியாமல் போகவே இன்று நள்ளிரவுடன் ஒத்தி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |