ரஞ்சனின் உறுப்புரிமை நீக்கத்தால் நாடாளுமன்றில் வெடித்தது களேபரம்!
ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தீர்மானத்திற்கு எதிராக சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்கட்சியினர் நாடாளுமன்றில் இன்றைய தினம் களேபரத்தில் ஈடுபட்டனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், தனது நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்படுவதற்கெதிராக ரஞ்சன் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதனை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத்திற்கு தொடர்ச்சியக 03 மாதங்கள் சமூகமளிக்காத படியினால், ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமை வெற்றிடமாக இருப்பதாகத் தெரிவித்து நாடாளுமன்ற செயலாளரினால், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கு கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டதாக சபாநாயகர் இன்று சபையில் தெரிவித்திருந்தார்.
இதற்கெதிராக சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்கட்சியினர் சபாநாயகரின் இந்த முடிவினை விமர்சித்து எதிர்ப்பு வெளியிட்டனர். இதன் போது நாடாளுமன்ற ஜனநாயகத்தை சபாநாயகர் மீறி செயற்பட்டதாக சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
மேலும் இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபாநாயகரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை வாபஸ் பெறும்படியும் கோரிக்கை விடுத்தார்.
எனினும் அதனையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார்.
இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குழுவாக சபாநாயகரின் அக்கிராசனத்திற்கு கீழே உள்ள நாடாளுமன்ற செயலாளருடன் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர்.