நீதித்துறையின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறி : சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு அழுத்தம் ஏற்படுவது குறித்து சங்கத்தால் அவதானிக்கப்பட்டிருப்பதாக சங்கத்தின் தலைவர் மேலும், சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகரிடம் கோரிக்கை
தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கவலையடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கையையும் சபாநாயகரிடம் கையளித்தார்.
நீதிபதிகள் உள்ளிட்ட நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மகிந்த யாப்பா இந்த சந்திப்பின் போது உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.