சிங்கள மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு! சரத் வீரசேகர பகிரங்க எச்சரிக்கை
பொறுமைக்கு எல்லையுண்டு
பௌத்த மதத்தின் முதன்மை நாடான, இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு குருந்துார் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாக குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரபாகரனின் கட்சி என்று குறிப்பிட்ட அவர், கோணகல கிராமத்தில் 54 சிங்களவர்கள் கொல்லப்பட்டபோது, கொழும்பில் இந்து மத வேல் திருவிழா இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.
எனினும் வடக்கில் பௌத்த நடைமுறைகளுக்கு கௌரவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அண்மையில் நாகவிஹாரையில் புத்த பெருமான் சிலையை நிறுவுவதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், குருந்துார் மலையில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் பல நுாற்றாண்டுளுக்கு முற்பட்ட பௌத்த சின்னங்களாகும்.
எதிர்ப்பு
கடந்த 9ஆம் திகதி குருந்துார் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் பாரிய தடைகளை ஏற்படுத்தினர்.
இவர்களால், அழைத்து வரப்பட்டவர்கள் கிராம மக்கள் அல்லர். அவர்கள் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.