முறையற்ற கடவுச்சீட்டை பயன்படுத்திய வழக்கில் இருந்து விமல் வீரவன்ச விடுதலை...!
முறையற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தியமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வழக்கு இன்று (01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு செயலிழந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
காலாவதியான கடவுச்சீட்டு
விமல் வீரவன்ச வெளிநாடு செல்வதற்கான விசா அடங்கிய காலாவதியான கடவுச்சீட்டை விமான நிலையத்தில் வழங்கியிருந்ததாகவும், ஆனால் கடவுச்சீட்டின் நிலை குறித்து விமான நிலையத்தில் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அவர் புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பெற்று மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சித்த போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
முதன்முறையாக காலாவதியான கடவுச்சீட்டுடன் வீரவன்ச வந்த போது விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்ய தவறியதாகவும், அதற்கு பதிலாக புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுடன் வந்த போது அவரை கைது செய்ததாகவும் அவர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
வழக்கில் இருந்து விடுதலை
இந்த நிலையில் பழைய கடவுச்சீட்டில் செல்லுபடியாகும் வீசாவைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுடன் பயணிக்க முடியும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்ததையும் சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்களை கருத்திற் கொண்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை வழக்கில் இருந்து விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |