ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் துறையினர் மட்டுமின்றி அனைத்து சுயதொழில் செய்பவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் (Anupa Pasqual) தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ”சமூக வலுவூட்டலுக்காக கல்வி முறையில் மாற்றம் வரவேண்டும். அதன்படி, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணிதம், மதம், மொழி போன்ற பாடங்களில் சித்திபெறாமை, பரீட்சையில் சித்தி பெறாததாகக் கருதக் கூடாது.
தொழிற்கல்வி
எனவே, க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் பாடத்திட்டத்தில் திறன்விருத்தி மற்றும் தொழிற்கல்வி பாடத்தை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இத் தீர்மானத்தை அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு (Ministry of Education) முடிவெடுத்துள்ளது.
அதற்கிணங்க எதிர்காலத்தில் ஒரு முழுமையான நிபுணத்துவத்துவம் மிக்கவர்களை உருவாக்குவதற்குத் தேவையான கல்விச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
மேலும், சமூகத்தை வலுப்படுத்த நிலம் ஒரு முக்கிய காரணியாகும். எனவே, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற, ஆனால் இதுவரை பயிரிடப்படாத நிலத்தைப் பயன்படுத்தும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைவருக்கும் ஓய்வூதியம்
அத்துடன் முழு நாட்டையும் வலுவூட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அதற்காக, அரச மற்றும் தனியார் துறையினர் மட்டுமின்றி அனைத்து சுயதொழில் செய்பவர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றோம்.
அதேபோல், ஒரு தொழில்முயற்சியாளர்களைக் கொண்ட நாட்டை உருவாக்க நாமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதனுடன், அனைவரும் தொழில் கல்வியையும் பெற வேண்டும்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் முன்னேற்றுவதற்கும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முன்பள்ளி ஆசிரியர்களை வலுவூட்டுவதற்காக “லியசவிய நிகழ்ச்சித்திட்டத்தையும்” நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
அஸ்வெசும திட்டம்
மேலும், அஸ்வெசும பெறுபவர்களில் 12 இலட்சம் பயனாளிகளுக்கு வலுவூட்டுவது எமது முக்கிய நோக்கமாகும். அதற்காக இந்த வருடம் 03 இலட்சம் குடும்பங்கள் வலுவூட்டப்பட வேண்டும். அதற்குத் தேவையான சுமார் 188,000 ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
அதன்போது, உலக வங்கி திட்டத்தின் கீழ் 10,000 குடும்பங்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கீழ் 16,000 குடும்பங்களையும் வலுவூட்டுத் தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. அதற்காக அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சியும் இம்மாதம் நிறைவடையும்.
மேலும், இளைஞர் சேவைகள் மன்றம், தெங்கு அபிவிருத்திச் சபை மற்றும் சிறுதோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து பல சமூக வலுவூட்டல் வேலைத்திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவற்றின் மூலம் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க எதிர்பார்க்கின்றோம்” என அனுப பஸ்குவல் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |